அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போலீஸ் வாகனம் முன்பு பெண்கள் செருப்புடன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி சவுக்கு சங்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டியில்,காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இதனை பாத்த சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா, இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைமில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த நிலையில்,தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவைக்கு மூலம் வேன் மூலம் அழைத்து வந்தனர். இந்த வேன் தாராபுரம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது. இதில் சவுக்கு சங்கர் மற்றும் 2 காவல்துறையினர் லேசான காயமடைந்தனர். இதனையடுத்து அனைவரும் தாராபுரம் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் வேறு வாகனம் மூலம் அங்கு இருந்து கோவை வந்தனர்.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து காலை 11 மணி முதல் சவுக்கு சங்கரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை மாலை 4 மணி வரை நீடித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. உடல் பரிசோதனைக்கு பின்னர் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது நீதிமன்றம் வளாகத்தில் கூடியிருந்த தி.மு.க மகளிர் அணியினர், போலீஸ் வாகனத்தை மறித்து செருப்புகள் உடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களை அவதூறாக பேசும் சவுக்கு சங்கரை சிறைக்குள்ளே வைக்க வேண்டும்,பெண் காவலர்கள் மற்றும் அரசு பணியில் இருப்பவர்களை மிகவும் இழிவாக சவுக்கு சங்கரை வெளியே விடக்கூடாது என கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நீதிபதி தனி அறையில் வைத்து சவுக்கு சங்கரை விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“