திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த வீ.வருண்குமார், திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில், கண்காணிப்பாளராக எஸ்.செல்வநாகரத்தினம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சி, மாவட்டத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் சட்டம் ஒழுங்கு பேணிக்காக்கப்படும். குற்றச் செயல்களில் ஈடுபடும் ரௌடிகள் மற்றும் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருச்சி மாவட்டத்தில் நடந்து வரும் சொத்து அபகரிப்பு தொடர்பான வழக்குகளை முடிக்கவும், தொடர்புடைய குற்றத்தில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும், தொடர்புடையோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை தொடர்பான பொது மக்களின் குறைகள் உடனுக்குடன் களைந்து அவற்றுக்குத் தீர்வு காணப்படும். பொது காவல் துறையினர் மக்களுடனான நல்லுறவு மேம்படுத்தப்படும். காவல் துறையினரின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களது நியாயமான, கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் மனச்சோர்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும். காவல் நிலையங்களின் செயல்பாடு மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் 1986 மே 31-இல் பிறந்த எஸ்.பி. செல்வநாகரத்தினம், பட்டப்படிப்பை முடித்து 2014- ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, வடமாநிலங்களில் காவல் அதிகாரியாகப் பணியாற்றிய அவர், தமிழ்நாடு காவல்துறையில் சென்னை காவலர் பயிற்சிப் பள்ளியில் துணை இயக்குநராகவும், அதன் பின்பு பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். பின்னர் 2024 அக்டோபர் முதல் சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட் காவல் துணை ஆணையராகவும் பணியாற்றினார். தற்போது திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“