நகை திருட்டு வழக்கில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவரின் சகோதரர் போலீசாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். இவரை திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்துச்சென்ற திருப்புவனம் போலீசார், அவரை கொடூரமாக அடித்து, மிளகாய் பொடி கொடுத்து துன்புறுத்தினர். அடிதாங்க முடியாத அஜித்குமார் மரணம் அடைந்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். டி.எஸ்.பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்றும், முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் கூறினர். அதேபோல் அஜித்குமார் சகோதரர் நவீன் குமாருக்கு அரசு வேலை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையோ வழக்கு விசாரணையில் இளைஞர் மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளைஞர் மீது புகார் அளித்த நிகிதா என்ற பெண்மணி குறித்து மோசடி தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ள நிலையில், மரணமடைந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப்பணி கொடுப்பது என்பது சாராண கண்துடைப்பு நடவடிக்கை என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அஜித்குமார் இறந்ததால் அரசு பணி பெற்ற அவரின் ககோதரர், நவீன்குமார் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் அவர் மருத்துவ பரிசோனைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் தாக்கியதில் நவீன்குமாருக்கு காலில் வலி ஏற்பட்டள்ளதாகவும், இதற்காக அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அஜித்குமார் விசாரணை செய்யப்பட்ட போது அவரது சகோதரர் நவீனையும் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதாக கூறியிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தரேலால் சுரேஷ் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன் காவலர்கள் தாக்கியதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார்
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைக்காக இரத்தம், மற்றும் கால்பகுதியில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என மருத்துவர்கள் கூறியதால் தற்போது நலமுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மடப்புரத்தில் தனிப்படை காவலர்கள் தன்னையும் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக அங்கிருந்த காவல் துறையினரிடம் எழுத்து பூர்வமாக தெரிவித்தார்