நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்துள்ள புகார் தொடர்பான விவகாரம் கடந்த இரு தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், என்னையும் விஜயலட்சுமியையும், நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரித்தால் பிரச்னை அரைமணி நேரத்தில் முடிந்துவிடும் என்று சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், சீமான் மீது, கொலை மிரட்டல், கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சீமான சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதை சாதாரண வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும், சீமானுக்கு எதிரான புகாரை, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், 12 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று கூறி சீமான் மனுவை நீதிபதி, தள்ளுபடி செய்தார். இதனிடையே, இந்த வழக்கில் சீமான் நாளை ஆஜராக வேண்டும் என்று காவல்துறை சார்பில், அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அப்போது சீமான் வீட்டு காவலாளிக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், சீமான் வீட்டு காவலாளி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நாளை தன்னால் ஆஜராக முடியாது என்றும் சீமான் கூறியுள்ளார்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சீமான், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனால் இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் சீமான், காவல்நிலையத்தில் விசாரணைகன்கு ஆஜராவாரா? அல்லது கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு, தமிழகத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், இந்த விவகாரத்தில எப்படியாவது என்னை அசிங்கப்படுத்தி, எனது ஓட்டு வங்கியை தடுத்துவிடலாம். மக்களுக்கு என் மீது இருக்கும் அன்பு மற்றும் பாசத்தை சிதைத்துவிடலாம். தனிப்பட்ட முறையில் எனது பண்பு மற்றும் குணத்தை சிதைத்துவிடலாம் என்று பார்க்கிறார்கள். அதை வைத்துதான் குடிகாரன் பொம்பளை பொறுக்கி என்று சொல்கிறார்கள். இது எல்லா அரசியல் தலைவர்களுக்கும் கட்டமைக்கும் ஒரு விஷயம் தான்.
ஒரு அளவுக்கு மேல் குறிப்பாக திராவிட அரசியல் இந்த கருவியை தான் கடைசியாக கையில் எடுக்கும். இதனால் நான் துவண்டுவிட்டேன் என்றால் நான் போராட்டக்காரன் அல்ல லட்சியக்காரன் அல்ல, அரசு பேசி சரி செய்யும் அளவுக்கு இது பெரிய குற்றம் இல்லை. அந்த அம்மா ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் இருந்துகொண்டு, பேசினால் ஒன்றும் ஆகாது. நேருக்கு நேராக அமர வைத்து பேச வைக்க வேண்டும். நான் சென்றமுறை விசாரணையில் சொன்னேன். எங்கள் இருவரையும் நேருக்கு நேர் உட்கார வைத்து பேச வைத்தால் அரைமணி நேரத்தில் முடிந்துவிடும்.
யார் பொய் சொல்வது யார் உண்மையை சொல்வது என்று அப்போது தெரிந்துவிடும். ஆனால் உங்களுக்கு இந்த பிரச்னை தேவைப்படுகிறது என்பதால் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறீர்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்றேன். அது சரி வரவில்லை. அதனால் இப்போது உச்சநீதிமன்றம் போயிருக்கிறேன். அங்கு இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்று உறுதியாக நம்புகிறேன். 8 மணிக்கு நான் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்ற சீமான் கூறியுள்ளார்.