ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்தவர் நாகராஜ் இன்பவள்ளி தம்பதி. இவர்களின் மகன், முத்து கடந்த 15 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த 10-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் நடைபெற்ற ராணுவ பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட சக ராணுவ வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது சிகிச்சை பலன் என்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ராணுவ வீரர் முத்துவின் உடலை சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றது. அதன்படி மும்பையில் இருந்து விமானம் மூலம் அவரது உடல் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் முத்துவின் உடலுக்கு மதுரை மாவட்டம் சார்பாக அரசு மரியாதை செய்யும் விதமாக இந்திய ராணுவம் சார்பாக கர்னல் ராஜீவன், மதுரை திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் சீதாராமன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா உள்ளிட்டர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதை தொடர்ந்து இங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராணுவ வீரர் முத்துவின் உடல் தேனி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“