/indian-express-tamil/media/media_files/2025/09/20/minister-thangam-thennarasu-tamil-culture-2025-09-20-21-20-40.jpg)
தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டுடன் வாழ்ந்தனர்: கீழடியில் அமைச்சர் தங்கம் தென்னரசு
சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்தில், தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையம் இணைந்து, சிந்துவெளி நாள் விழா-வை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு உரையாற்றினார்.
விழாவில் வெளியிடப்பட்ட ஆய்விதழ்கள்
இந்நிகழ்வில், 'தமிழ்நாட்டில் தொல்பொருள் அகழாய்வுகள் - தொடக்க அறிக்கை', 'சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிப்பு நூற்றாண்டு: மாநாட்டு ஆய்வுகள்', மற்றும் 'தமிழ்நாட்டில் தொல்பொருள் தளங்களுக்கான சமீபத்திய அறிவியல் காலக் கணக்கீடுகள்' உள்ளிட்ட ஆய்விதழ்கள் வெளியிடப்பட்டன.
விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "கீழடி அகழாய்வுகள், பண்டைய தமிழர்கள் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே உயர்ந்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்துடன் வாழ்ந்ததற்கான வலுவான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன. தமிழர்கள் நவநாகரிக ஆபரணங்கள், எழுத்துச் சுவடிகள், தற்காப்பு ஆயுதங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியதை இந்த அகழாய்வுகள் நிரூபிக்கின்றன," என்று தெரிவித்தார்.
மேலும், "1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி, சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரிகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் வகையில், இதை 'சிந்துவெளி நாள்' என்று குறிப்பிட்டுள்ளோம். அதை கீழடியில் கொண்டாடுவது தமிழர்களுக்குப் பெருமை," என்றும் குறிப்பிட்டார்.
அகழாய்வு மற்றும் அருங்காட்சியகப் பணிகள்
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கற்காலம் முதல் சங்க காலம் வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்று வருவதாகவும், கீழடியில் தற்போது 10ஆம் கட்ட அகழாய்வு சிறப்பாக நடந்து வருவதாகவும் கூறினார். மேலும், முதலமைச்சர் முன்னிலையில் ரூ.17.80 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்ட கீழடி திறந்தவெளி அருங்காட்சியகப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த அருங்காட்சியகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை தாம் மற்றும் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இணைந்து திறந்து வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, சிந்துவெளி ஆய்வு மைய ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.