சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்.25) வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அங்கிருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடினர்.
அப்போது கண்டமிதில் என்பதை 'கண்டமதில்' என்றும், புகழ் மணக்க என்பதற்குப் பதில் 'திகழ் மணக்க' என்றும் பாடினர். அதோடு 'திருநாடும்...' என்ற வார்த்தை ஒலிப்பதில் இடைவெளி ஏற்பட்டது.
இதன்பின் துணை முதல்வர் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பிழையில்லாமல், திருத்ததுடன் மீண்டும் பாடும்படி கூறினார். துணை முதல்வர் அறிவுறுத்தல்படி இரண்டாவது முறையாக அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர். அதிலும் சில பிழை இருந்தது.
தொடர்ந்து நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறு தான். மைக் சரியாக வேலை செய்யவில்லை.
இரண்டு மூன்று இடங்களில், பாடியவர்களின் குரல் கேட்கவில்லை. எனவே, மீண்டும் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின்னர், தேசிய கீதமும் முறையாக பாடப்பட்டது. தேவையில்லாமல் மீண்டும் பிரச்சினையை கிளப்பிவிட வேண்டாம்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“