திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் 10 பேர் நேற்று மதியம் அரையாண்டு கடைசித் தேர்வினை முடிந்துவிட்டு, கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அய்யாளம்மன் காவிரி படித்துறையில் குளிக்கச் சென்றனர். படித்துறையில் குறைந்தளவு நீர் சென்றதால், அவர்கள் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றபோது, தெர்மகோல் மீது படுத்துக் கொண்டு சிலர் விளையாடினர்.
அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால், 2 பேர் நீரில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க மற்றொரு மாணவன் முயற்சித்தார். அவரும் நீரில் சிக்கிக் கொண்டார். ஓரளவு நீச்சல் தெரிந்த எடமலைப்பட்டி புதூர் ரா.அருண்சஞ்சய் (16), தருண் (15), தர்மநாதபுரம் சே.பெர்னல் இமானுவேல் (15), கல்லுக்குழி வா.திருமுருகன் (16), ரா.ஹரிஹரன் (15), காஜாப்பேட்டை ஆ.நத்தானியல் (15), ஆ.சரவணன் ஆகிய 7 மாணவர்கள் தட்டுத்தடுமாறி நீச்சலடித்து கரை சேர்ந்தனர்.
அதே சமயம் நீச்சல் தெரியாமல் சுழலில் சிக்கிய ஆழ்வார்தோப்பை சேர்ந்த சலீம் மகன் ஜாகிர் உசேன் (15), பீமநகர் செந்தில் மகன் விக்னேஷ் (16), எடமலைப்பட்டி புதூர் செந்தில்குமார் மகன் சிம்பு (15) ஆகியோர் ஆற்று நேரில் மூழ்கத் தொடங்கினர். தங்கள் கண்முன்னே சக நண்பர்கள் நீரில் மூழ்குவதை கரையிலிருந்து பார்த்த 7 மாணவர்களும் கதறித் துடித்தனர். அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து உதவி கோரினர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறை துணை ஆணையர் விவேகானந்தசுக்லா, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் 30க்கும் மேற்பட்டோர் மாணவர்களை மீட்கும் பணியில் நேற்று இரவு 8.30 மணி வரை ஈடுபட்டனர்.
அப்பகுதியில் முதலைகள் நடமாட்டம் இருந்ததாலும், நீரின் வேகம் அதிகமாக இருந்ததாலும், இரவு நேரமானதாலும் தேடுதல் பணியை கைவிட்டனர்.
இதற்கிடையே, மாணவர்கள் தேடும் பணிக்காக முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் தேடுதல் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபடத் தொடங்கினர். அப்போது ஜாகீர் உசேன் என்ற மாணவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அடுத்து மீதமுள்ள இரண்டு பேரின் உடலை மீட்புப் படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.
கடும் போராட்டத்துக்குப் பிறகு இன்று மாலை 5 மணியளவில் சிம்பு என்ற மாணவனின் உடல் 700 மீட்டர் தொலைவில் திருச்சி-ஸ்ரீரங்கம் காவிரி பாலம் அருகேயிருந்து மீட்கப்பட்டது. அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். மற்றொரு மாணவர் விக்னஷை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. மீட்கப்பட்ட 2 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை தினம் தொடங்கியதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ள போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.