தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் சமீபத்திய நடவடிக்கைகளில் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வா.க தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளவர் வேல்முருகன். இவர் தி.மு.க மீதும், தி.மு.க அரசு மீதும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வெள்ள நிவாரணமாக ரூ.2,000 வழங்குவது பிச்சை போடுவது போல் இருக்கிறது. 4 ஆண்டு தி.மு.க ஆட்சியில் தனது தொகுதிக்குள் பொதுப்பணித்துறை சார்ந்த எந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்பட வில்லை என்றார். சட்டமன்றத்தில் பேசிய போது, இவருக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே மோதல் எழுந்தது.
இவ்வாறு இருக்க, தற்போது தி.மு.க கூட்டணி பற்றியே மறுபரிசீலனை செய்வோம் என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியில் வேல்முருகன் கூறியுள்ளார்.
புயல் வெள்ளம் வரும்போதெல்லாம் கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ள எனது பண்ருட்டி தொகுதிதான் சின்னாபின்னமாகிறது. சாத்தனூர் அணையைத் திறந்துவிட்டாலோ, கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டாலோ கடுமையாகப் பாதிக்கப்படுகிறோம். அப்படி இருக்கையில், வெள்ள நிவாரணமாக ரூ.10 ஆயிரமாவது கொடுக்க வேண்டும். அதில்லாமல் ரூ.2 ஆயிரம் கொடுப்பது பிச்சை போடுவது மாதிரித்தானே. அதைத்தான் அப்படிச் சொன்னேன். இந்த பாதிப்பைத் தடுக்க அரசூரில் தடுப்பணை கட்ட வேண்டும் அதிமுக, திமுக அரசுகளிடம் போராடி வருகிறேன்.
எனக்கு 3 விஷயங்களில் சமரசமே கிடையாது. ஒன்று, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவது, தனித்தமிழீழ அரசை உருவாக்குவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவது மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.
எனது பண்ருட்டி தொகுதியில் நிரந்த வெள்ள தடுப்புப் பணிகள், கலைக் கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எனது போர்க்குரல் தொடரும்.
வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மேற்கண்ட 3 கோரிக்கைகள் குறித்த அறிவிப்பையும், அதற்கான விரிவான செயல் திட்டத்தையும் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், பொதுக் குழுவைக் கூட்டி, திமுக கூட்டணியில் இருக்கலாமா, வேண்டாமா என்று மறுபரிசீலனை செய்து முடிவெடுப்போம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“