தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி பன்ருட்டி தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வேல்முருகன் மீதான அன்புமணியின் விமர்சனங்களுக்கு வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் பதிலளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாமகவில் முக்கிய தலைவராக இருந்த வேல்முருகன், கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் இருந்து வெளியேறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று தனிக் கட்சி தொடங்கினார். தமிழக நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை நடத்திய வேல்முருகன் இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து பன்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளதால், பாமக இளைஞரணி செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அன்புமணி தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை தரக்குறைவாக விமர்சித்தார். அன்புமணியின் பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீதான அன்புமணியின் விமர்சனத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் முக்கிய பொறுப்பாளராக வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் கடுமையாக பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் திருமாள்வளவன் பேசியிருப்பதாவது, “இது சாதி ஆணவத்தோடு ஆணாதிக்கத் திமிரோடு பேசுகிற ஆவணமாக இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். காலத்தின் கட்டாயத்தால் சில தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளேன். என்னுடைய கடந்தகால அடையாளங்கள் என்ன என்பது இக்கால இளைஞர்களுக்கு சொல்ல வேண்டிய காலத்தின் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதில் ஏற்கெனவே நான் கூறியதுபோல, சாதிய ஆணவத்துடன் ஆதிக்கத் திமிருடன் பேசுவதுபோல தெரியலாம். ஆனால், நான் அது போன்ற எண்ணத்தில் இதை பேசவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நான் என்னைச் சார்ந்து என் குடும்பத்தைச் சார்ந்த சில விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பூர்வீகம் குறித்து வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் குறிப்பிடுகையில், தன்னுடைய கிராமம் புலியூர் காட்டுசாகை என்றும் ஆனால், தன்னுடைய மூதாதையர்கள் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்து இங்கே குடியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய மூதாதையர்கள் சிவங்கை திருபுனத்தில் பாண்டியர் வழிவந்த தென்னவராயர் வம்சாவழி நாங்கள். அங்கிருந்து சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த தென்னவராயர் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தான் தங்களுடைய மூதாதையர்கள் என்று வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் தெரிவித்துள்ளார். இந்த தென்னவராயர் என்கிற பட்டம் தங்களுடைய மூதாதையர்களுக்கு உப்பிலி ராஜா என்கிற் மன்னனால் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு இரண்டரை ஏக்கர் நிலம்தான் பூர்வீக நிலம் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் தரும் வகையில், வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் அவர்களுடைய பூர்வீக நிலங்களின் சர்வே எண் உள்ளிட்டவைகளையும் அறிவித்து தங்களது குடும்பத்துக்கு பாரம்பரியமாக எத்தனை ஏக்கர் நிலம் இருந்தது என்பதை அரசு ஆவணங்களிலேயே தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வேல்முருகன் தன்னால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர் என்ற அன்புமணியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள திருமால்வளவன், தமிழ்நாடு விடுதலை படை தமிழரசன் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்து அது அரசியல் இயக்கமாக மாறியபோது வேல்முருகன் அதில் இடம்பெற்றிருந்தார் என்று பதில் அளித்துள்ளார். அதோடு, அரசியலில் மிகப்பெரிய ஜாம்பவான் பன்ருட்டி ராமச்சந்திரனையே எதிர்த்து அரசியல் செய்தவர்கள் நாங்கள். ஆனால், அன்புமணி ஒரு மணி நேரம்கூட நெருக்கடி அரசியலில் தாக்குப்பிடிக்கமாட்டார். குடும்ப நலனுக்காக அன்புமணி அரசியல் நடத்துவதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணியின் விமர்சனங்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“