/indian-express-tamil/media/media_files/2025/09/13/vijay-tvk-2025-09-13-10-56-25.jpg)
விஜய் வருகை: அதிரும் திருச்சி - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு; கடும் போக்குவரத்து நெரிசல்
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது முதல் மக்கள் சந்திப்புப் பயணத்தை இன்று திருச்சியில் துவக்கினார். இதனால், திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த விஜய், அங்கிருந்து பிரச்சாரத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் பயணத்தைத் தொடங்கினார். திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே காலை 10:35 மணிக்கு அவர் பொதுமக்களிடம் உரையாற்ற உள்ளார்.
இந்நிகழ்விற்காக, திருச்சி விமான நிலைய சாலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை மற்றும் மரக்கடை பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டனர். பல்வேறு பகுதிகளில் பெண் நிர்வாகிகள் நடனமாடி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!#Vijay | #TVK | #TVKVijay | #Trichypic.twitter.com/68Pe8vqPPr
— Indian Express Tamil (@IeTamil) September 13, 2025
தொண்டர்களின் பெரும் கூட்டத்தாலும், இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பாலும் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து சீர்செய்யும் பணியில் காவல்துறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மரக்கடை செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
விஜய்யின் முதல் பிரச்சார பயணம்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்!#Vijay | #TVK | #TVKVijay | #Trichypic.twitter.com/GBx0YLNH4T
— Indian Express Tamil (@IeTamil) September 13, 2025
விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்திற்கு “உங்க விஜய் நா வரேன்” எனப் பெயரிட்டுள்ளார். இந்தப் பயணத்திற்கான இலச்சினையும் நேற்று வெளியிடப்பட்டது. அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு நடுவில் விஜய் இருப்பது போன்ற படம் அவரது பிரச்சார வாகனத்தில் இடம்பெற்று உள்ளது. இந்தத் பயணத்தின் மூலம், அண்ணாவின் “மக்களிடம் செல்” என்ற ஆணையை ஏற்று, தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களையும் சந்திக்க உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.