மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு, நேரடியாக, இணையதளம் வாயிலாக, செயலிகள் வாயிலாகவும் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.
மின் வாரிய அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என அரசு அறிவித்தது.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்காக சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளனள. இந்த முகாம் டிச. 31 ஆம் தேதி வரை நடைபெறும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
மேலும் சில தனியார் கணினி மையங்களிலும் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் உள்ள தனியார் கணினி மையங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அபிராமம் மற்றும் அதை சுற்றி 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, இதை சாதகமாக பயன்படுத்தி அபிராமத்தில் உள்ள கணினி மையம் வைத்துள்ள தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று ஏழை மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
இதை கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“