தமிழக மின்சார வாரியம் அளித்த அறிவிப்பின் படி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த மக்களின் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது: "2.33 கோடி நுகர்வோர்களில் இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இது குறித்து இன்னும் விரிவாக ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்பட்டு வருகின்ற 2811 பிரிவு அலுவலகங்களில் இன்று முதல் வருகின்ற டிசம்பர் 31 வரை மின் இணைப்பு எண்ணை ஆதரவுடன் இணைக்க சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இந்த சிறப்பு முகாம்களில் ஆதரவுடன் இணைப்பதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை அதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. பண்டிகை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் பிரிவு அலுவலகங்களில் நடைபெறுகின்றன. எனவே, பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொண்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான பணியை செய்துகொள்ளலாம்.
சமீபமாக இந்த திட்டத்திற்கு மாறுபட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தமிழக அரசு வழங்கும் இலவச மின்சார திட்டங்கள் மற்றும் பிற மானியங்கள் ஆகிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, எத்தனை பேர் சொந்த வீட்டில் இருக்கிறார்கள், எத்தனை பேர் வாடகை வீட்டில் இருக்கிறார்கள், ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கின்றது ஆகிய தரவுகள் அரசாங்கத்திடம் இல்லை. ஏறக்குறைய 1,15,000 மின்னிணைப்புதாரர்களின் தரவுகள் மட்டுமே மின்வாரியத்தில் இருந்தன.
மின்சார வாரியத்தை மேம்படுத்த வேண்டும். அதே போல, புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மின்சார வாரியத்தை நவீன மயமாக்குவதற்காக மின் இணைப்பு எண்ணையும் ஆதாரையும் இணைக்க பணிகள் தொடங்கியுள்ளது.
ஒருவர் ஐந்து மின் இணைப்பு வைத்திருந்தாலும் சரி, மூன்று மின் இணைப்பு வைத்திருந்தாலும் சரி, அவருக்காக ஏற்கனவே வழங்கப்படுகின்ற 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். வயதானவர்களுக்கும், மாற்றுதிறனாளிகளுக்கும் சிறப்பு சாவடி வழங்கப்படும்" என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil