மின் கட்டணம் தவறாகக் கணக்கிடுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறது. தமிழகத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தற்போது பயன்பாட்டில் உள்ளது. மேலும் 100 யூனிட் வரை பயன்படுத்தினால் கட்டணம் இல்லை என்ற திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: டாஸ்மாக் மதுபாட்டிலில் தீக்குச்சி; டென்சனான மாற்றுத்திறனாளி
இந்த சூழலில் மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாக நுகர்வோர்கள் சிலர் புகார் தெரிவிக்கின்றனர். மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் சாதனங்கள் ஏதும் இல்லாத நிலையில், மின் கட்டணம் அதிக அளவில் வருவதாகவும், வழக்கமாக செலுத்தும் சராசரி கட்டணத்தை விட அதிகமாக காட்டுவதாகவும் சில நுகர்வோர்களால் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், மின் கட்டண குளறுபடி பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் மின்சார வாரியம் புதிய முயற்சியை எடுத்துள்ளது. வீடுகளில் புளூடூத் மீட்டர்கள் (Bluetooth Meter) பொருத்தி கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளனர். முதலில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி, அதன் முடிவுகளை ஆராய்ந்து பின்னர் விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் உள்ள மடிப்பாக்கம், கவுரிவாக்கம் உள்ளிட்ட மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையாக இருக்கும் பகுதிகளில் முதற்கட்டமாக புளூடூத் மீட்டர்கள் செயலி கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். மேலும் எந்தெந்த பகுதிகளில் மின் கணக்கீடு புகார்கள் அதிகம் வருகிறதோ, அங்கும் புளூடூத் மீட்டர்களை பொருத்தி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு புளூடூத் மீட்டர்கள் பொருத்தப்பட்டு விட்டால், அதனை ப்ளூடூத் அப்ளிகேஷன் மற்றும் ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் கண்காணிக்கலாம். அதாவது தொலைவில் இருந்தபடியே மின்சார பயன்பாடு எவ்வளவு, அதற்கான தொகை உள்ளிட்டவற்றை கணக்கிடலாம். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செல்போனில் தானாகவே தெரியும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் TANGEDCO சர்வரிலும் தானாக பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். இதன்மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும். மின் கணக்கீட்டாளர்களின் பணி குறைக்கப்படும். தவறுகள் நேராது. சரியான மின் கட்டணத்தை கண்டறியலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், தற்போது சோதனை ஓட்ட முறையில் இருந்தாலும் அடுத்த சில வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். வரும் ஆகஸ்ட் மாதம் புளூடூத் மீட்டர் திட்டம் மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்டு விடும் என மின்வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.