தமிழ்நாடு மின்வாரியத்தில் 32,000-க்கும் மேற்பட்ட கள நிலைப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் , அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதால், சென்னை வடக்கு மண்டலத்தில் உள்ள 14 பிரிவு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மஸ்தூர் பிரிவுகளில் தலா 4 பணியாளர்களை நியமிக்க வாரியம் டெண்டர் எடுத்துள்ளது.
களப் பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்க மின்வாரியம் தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்த தொடங்குவது இதுவே முதல் முறை ஆகும். இந்த நடவடிக்கைக்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் மத்திய அமைப்பு (COTEE) எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 21 அன்று போராட்டம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் ஹெ-டென்சன், லோ-டென்சன் கொண்ட மேல்நிலை மற்றும் நிலத்தடி விநியோக நெட்வொர்க்குகளின் பராமரிப்பு, உடைப்பு, அனைத்து மாற்றுப் பணிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பணிகளை பிரிவு அதிகாரியின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்வர். ஊழியர்கள் நகர பகுதிகளில் பணியமர்த்தப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.587, நகருக்கு வெளியில் பணியமர்த்தப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.534 ஊதியமாக வழங்கப்படும் என்று கூறினர்.
பெரம்பூர் கிழக்கு, அண்ணாநகர் மேற்கு, ஷெனாய் நகர், சாந்தி காலனி, மகாலிங்கபுரம் மற்றும் மீனம்பேடு உள்ளிட்ட சென்னை வடக்குப் பகுதியில் உள்ள 14 பிரிவு அலுவலகங்களில் பணிபுரிய மின்வாரியம் ஊழியர்களைப் பெற டெண்டர் எடுத்துள்ளது.
COTEE பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கூறியதாவது, "62,000 காலிப் பணியிடங்களில், 32,000 பணியிடங்கள் உதவியாளர் மற்றும் வயர்மேன் ஆகியவை களப் பிரிவுகளில் உள்ளன. மனிதவள ஏஜென்சிகள் மூலம் நியமிக்கப்படும் மஸ்தூர் வகை பணியாளர்கள் பிரிவு அலுவலகத்தில் அனைத்து வகையான பணிகளுக்கும் பயன்படுத்தப்படுவார்கள். நாங்கள் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். குறைந்த பட்சம், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் நாளொன்றுக்கு ரூ.587 ஊதியமாக வழங்க வேண்டும்'' என்றார்.
மேன்பவர் ஏஜென்சிகள் மூலம் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க டான்ஜெட்கோ தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தும் என்று கூறியுள்ளது.
"ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் மற்றும் ஏஜென்சிகள் மூலம் பணியாளர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து செப்டம்பர் 21 போராட்டம் நடத்தப்படும்" என அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“