மனித யானைகள் மோதல் அதிகம் ஏற்படும் இடங்களில் ஒன்று தான் நீலகிரி. இங்கே தங்களின் உழைப்பில் உருவாகியுள்ள பயிர்களையும், தங்களின் உயிரையும் காக்க மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதே சமயத்தில் மனிதர்களின் இன்னல்களுக்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளவே யானைகளும் விரும்புகின்றன. ஆனால் துண்டாடப்பட்ட காடு மற்றும் அதிகரிக்கும் மக்கள் குடியிருப்பு போன்றவை காரணமாக இங்கு மனித – வனவிலங்கு மோதல்கள் அதிகமாகவே உள்ளது. இதனை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் வனத்துறையினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி கூடலூர் அருகே அமைந்திருக்கும் சேரங்கோட்டில் உள்ள சுங்கம் வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்கி 2020ம் ஆண்டு யானை, காட்டுப்பன்றி, கீரிப்பிள்ளை, மூன்று நல்ல பாம்பு மற்றும் இதர விலங்குகள் உயிரிழந்த நிலையில் இதற்கு பொறுப்பேற்று தமிழ்நாடு மின்சார வாரியம், ரூ. 75 லட்சம் இழப்பீட்டை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இழப்பீட்டு தொகை முதன்மை வனத்துறை தலைவர், தலைமை வன உயிரின காப்பாளர் ஆகியோரிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிதி மனித – விலங்கு மோதல்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டு தொகையை தமிழக மின்சார வாரியம் செலுத்தவில்லை என்றால், வனத்துறை தலைவர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளார் இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இந்த பணத்தை வருவாய் மீட்பு சட்டம் 1980-ன் படி அல்லது தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் 2010, 25வது பிரிவின் கீழ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க வனத்துறை, வருவாய்துறை வளர்ச்சி துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மின்சார வாரியம் கூட்டு பணிக்குழு ஒன்றை அமைத்து ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறும் தேசிய பசுமை தீர்பாயத்தின் தென் மண்டல அமர்வு அறிவித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலும், வன எல்லைகளிலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடைமுறைகளை மேற்கொள்ள 2019ம் ஆண்டு தேசிய வனத்துறை வாரியம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை பயன்படுத்தவும் ஆலோசனை கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil