scorecardresearch

நகை வியாபாரியை சுற்றி வளைத்த சீருடை ஆசாமிகள்; ரூ 5 கிலோ நகை மாயம்: தஞ்சை மர்மம்!

சாப்பிட்டதற்கான பணத்தை கொடுத்துவிட்டு கீழே வைத்திருந்த நகைகள் மற்றும் பணம் அடங்கிய தனது பையை எடுக்க முயன்ற மணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Tanjore
Tanjore Jewelry theft cops begin search for accused

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

தஞ்சையில் நகை மொத்த வியாபாரியிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 5 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.14 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்தவர் மணி (52). நகை மொத்த வியாபாரி. இவர் சென்னையிலிருந்து தஞ்சையில் உள்ள நகைக் கடைகளுக்கு நகைகளை கொண்டு வந்து விற்பது வழக்கம்.

அந்த வகையில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு நகைகளுடன் வந்த அவர் வழக்கம்போல சில கடைகளில் நகைகளை கொடுத்துவிட்டு நேற்றிரவு பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு பிரபல ஸ்வீட் ஸ்டால் உணவகத்திற்கு சென்று உணவு சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு அதற்கான பணத்தை கொடுக்க அவர் தனது பையை கீழே வைத்துவிட்டு பர்சை எடுத்துள்ளார். அப்போது ஒரே நிறத்தில் சீருடை அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை சுற்றி நின்று கொண்டிருந்துள்ளனர்.

சாப்பிட்டதற்கான பணத்தை கொடுத்துவிட்டு கீழே வைத்திருந்த நகைகள் மற்றும் பணம் அடங்கிய தனது பையை எடுக்க முயன்ற மணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கீழே வைத்திருந்த நகைப் பையை காணவில்லை. அவரைச் சுற்றி சீருடை அணிந்து நின்றிருந்த நபர்களையும் காணவில்லை. திருடுபோன பையில் 10 கிலோ தங்கம், ரூ.25 லட்சம் இருந்ததாக மணி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் திருடு போன  பையில் 5 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.14 லட்சம் ரொக்கம் மட்டுமே இருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

நகை வியாபாரி மணி மொத்தம் 7 கிலோ 200 கிராம் தங்க நகைகள் கொண்டு வந்துள்ளார். அவற்றில் 2 கிலோ 200 கிராம் நகைகளை அவர் கடைகளுக்கு கொடுத்துவிட்டார். அதன் மூலம் கிடைத்த ரூ.14 லட்சத்தை திருடுபோன பையில் வைத்திருந்தார் என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

புகாரின் பேரில், தஞ்சாவூர் மேற்கு நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கொள்ளையர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிளை போலீஸார் ஆய்வு செய்தபோது, சந்தேகத்துக்கிடமான சீருடை அணிந்த 9 நபர்கள் வேகவேகமாக நடந்து செல்வது காணப்பட்டது.

மேற்படி நபர்கள் அங்கிருந்து இரண்டு ஆட்டோக்களில் புறப்பட்டு தஞ்சை பெரிய கோவில் வரை சென்று அங்கிருந்து வேறு வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றிருப்பது போலீஸாரின்  முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tanjore jewelry theft cops begin search for accused

Best of Express