தமிழகத்தில் ஒரு லட்சம் கோடியில், 2,781 கி.மீ., தூரத்திற்கு, புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்-கும்பகோணம்-விக்கிரவாண்டி இடையே அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை, நிதின் கட்கரி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
'தஞ்சாவூர் – விக்கரவாண்டி நான்கு வழிச்சாலை ரூ. 4,730 கோடி மதிப்பீட்டில், 164 கி.மீ.தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்–சோழபுரம், சோழபுரம்– சேத்தியாதோப்பு வரையிலான சாலைப் பணிகள் 95 சதவீத நிறைவு பெற்றுள்ளது.
மொத்த திட்டத்தில் நில கையகப்படுத்துவதில், சிக்கல்கள் மற்றும் முக்கிய சுணக்கமாக இருந்ததால், ஒப்பந்தக்காரர்களால் இந்த சாலைப் பணியை முடிப்பதில் சிக்கல் உள்ளதாக, பணியை செய்ய முடியாத எனக் கூறி என்னை சந்தித்தனர். மேலும், சாலை அமைப்பதற்கான கட்டுமான மூல பொருட்கள் கிடைப்பதில் சில சிக்கல் இருந்தது. இது போன்ற கடினமான சூழலிலும் பணிகள் முடிந்துள்ளது. பல தடைகளைத் தாண்டியும், சாலை மிகவும் தரமாக அமைந்து எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இந்த மொத்த பணிகளையும் மத்திய அரசு எந்த வித ஊழல் நடைபெறாமல் வெளிப்படைத் தன்மையுடன் இந்த பணி நடைபெற்றுள்ளது.
4 ஆண்டுகள் இந்த சாலைப் பணிகள் தாமதமாகி இருந்தாலும், சாலையானது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த சாலைப்பணி 2020,செப். 4-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு வரை சாலை அமைப்பதில், ஒப்பந்தக்காரர் தாமதப்படுத்தியதால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் அந்தச் சாலைப் பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணி தொடங்கும். திருச்சி இருவழிச்சாலையாக உள்ள 26 கி.மீ.தூரத்திற்கு ரூ.1800 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக மாற்றப்படும். இந்தப் பணி ஒரு மாதங்களில் தொடங்கப்படும்.
ஆந்திர, தமிழக எல்லையில் ரூ. 15 ஆயிரம் கோடியில், ராணிப்பேட்டை-சென்னை சாலையை விரிவாக்கம் செய்வதன் மூலம், சென்னை, பெங்களூர், ஆந்திரா இடையிலான கனரக வாகன போக்குவரத்து நெரிசல் குறையும். மதுரவாயல் ரிங்ரோடு, ஸ்ரீ பெரும்புத்துார் - சமுத்திரவயல், ராணிப்பேட்டை தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக, சென்னை-பெங்களூர் விரைவுச் சாலையை இணைப்பதற்கான சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, தேசிய நெடுஞ்சாலை மூலம் 10 புதிய சாலைகள் அமைப்பதற்காகத் திட்டம் 727 கி.மீ.தூரத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில், கோவை - சத்தியமங்கலம், தூத்துக்குடி - கன்னியாகுமரி, ராமநாதபுரம் - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - அரிச்சல்முனை, மதுரை - ராமேஸ்வரம், மங்களூர் - விழுப்புரம், மதுரை - தொண்டி, சேலம் - வாணியம்பாடி, மதுரை - தேனி உள்பட 10 ஊர்களுக்கு இடையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்- அரியலூர் - பெரம்பலூர் இடையே உள்ள 2 வழிச்சாலையை, 4 வழிச்சாலையாக மாற்றுவதால், சிமென்ட் தொழிற்சாலைகளுக்குப் பயன் உள்ளதாக அமையும். இதே போல், குலேசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான தனிச் சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ. ஒரு லட்சம் கோடியில், 2,781 கி.மீ., தூரத்திற்கு, புதியதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதே போல், 1,343 கி.மீ. தூரத்திற்கு. 68 சாலைத் திட்டங்கள் மூலம் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழகத்தில் 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 451 பல்வேறு சாலைத் திட்டங்கள் 9,300 கி.மீ. தூரத்திற்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்பில், தமிழகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, அதிகமான முக்கியத்தும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருவதுடன், தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை 4,975 சாலைகள் இருந்தது. 2014ம் ஆண்டுக்குப் பிறகு 6,806 சாலையாக உயர்ந்துள்ளது.
நாடுமுழுவதும் 5 லட்சம் கோடியில் மதிப்பீட்டில், 10 ஆயிரம் கி.மீ.தூரத்திற்கு 27 புதிய பசுமை வழிச் சாலை அமைய உள்ளது. தமிழகத்தில் 3 பசுமை வழிச்சாலை, 187 கி.மீ., நீளத்தில் ரூ.10 ஆயிரத்து 100 கோடி செலவில் அமைய உள்ளது. தமிழக முதல்வருக்கொரு கோரிக்கை , பணம் ஒரு பிரச்சனை அல்ல. ரூ. 2 லட்சம் கோடி வரை செலவு செய்துள்ளோம். மேலும், ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ளோம்.
தமிழக அரசு நிலம் கையாகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீர்,மின்சாரம், போக்குவரத்து தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தமிழக எப்போதும் சிறந்து விளங்குகிறது. சாலை போக்குவரத்தைப் பொறுத்துவரை தமிழக மக்களுக்கு நான் ஒரு சத்தியம் செய்து தருகிறேன். மத்திய அரசு, சாலை கட்டுமானத்தை அமெரிக்கா போன்று தரத்திற்கு நிகராக அமைத்து வருகின்றோம். இந்தியாவிலேயே, தேசிய நெடுஞ்சாலை பணியில், தமிழகம் நம்பர் ஒன்றாக உள்ளது. மேலும், தமிழகத்தின் பங்களிப்பு நல்லப்படியாக உள்ளது.
என்னுடைய கனவுத் திட்டமான நீர்வள மேலாண்மை துறை அமைச்சராக நான் இருந்த போது, கர்நாடக - தமிழக காவிரி பிரச்சனை குறித்து நான் நன்றாக அறிவேன். ஆந்திரா, கோலாவரத்தில் உள்ள கோதாவரி ஆற்று நீர், கடலில் கலக்கும் 30 டி.எம்.சி. அங்கிருந்து, கிருஷ்ண-பெண்ணாறு-காவிரி ஆற்றை இணைப்பு மூலம் தண்ணீரத் தமிழகத்தின் கடைக்கோடி வரை கொண்டு செல்ல திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்குள் நீர் பிரச்சனை தீர்வு கிடைக்கும். இனிவரும் காலங்களில் 95 சதவீதம் நிலம் கையகப்படுத்திய பிறகு தான் சாலைகள் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்', எனத் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.