கோவை – பெங்களூரு இடையே நவீன வசதிகளுடன் இயங்கும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் பயணிகளை கவரும் வகையில் தானியங்கி உணவு வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த உதய் எக்ஸ்பிரஸ் சேவை கடந்த வெள்ளிகிழமை(8.6.18) கோவை டூ பெங்களூரு இடையே தொடங்கப்பட்டது. உதய் விரைவு ரயில் சேவையை, மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ராஜன் கோகைய், மற்றும், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
பேருந்து போக்குவரத்தை காட்டிலும், இந்த ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் பொதுமக்கள் அதிகளவில் பயணிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டடுக்கு ஏ.சி. ரயிலில் பயணிகளை கவரும் வகையில் பலதரப்பட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக தானியங்கி உணவுப்பொருள் விநியோக எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதன் முறையாக டேப் எனும் கையடக்கக் கணினி மூலம் ஆர்டர் செய்தால், தானாகவே உணவுப் பொருட்களை வழங்கும் வகையில் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தேநீர், காபி, பிஸ்கட், சிப்ஸ், குளிர்பானங்கள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.
ரயிலில் உள்ள மொத்த 10 பெட்டியில் ஒவ்வொரு பெட்டியிலும் 120 பேர் வரை பயணிக்கலாம். ஆனால் தானியங்கி உணவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள பெட்டிகளில் மட்டும் 104 பேர் மட்டுமே பயணிக்க முடியும். சமைக்கப்பட்ட அல்லது சூடுபடுத்தியவுடன் சாப்பிடும் படியான உணவுகள் மட்டுமே இதில் இடம் பெற்றிருக்கும்.
இந்த கருவி செயல்படும் வீடியோ ஒன்றையும் மத்திய இணைய ரயில்வே துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
First ever food vending machine in running train installed in- Coimbatore – Bengaluru UDAY Express over Southern Railway pic.twitter.com/1C2ezhxNiT
— Ministry of Railways (@RailMinIndia) 9 June 2018
ரயில் பயணிகளுக்கான சொகுசு வசதியை மேம்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் தற்போதைக்கு பணம் வசூலிக்கப்படுவதாகவும், அதன் பின் பணமில்லா பரிவர்த்தனை மூலம் விநியோகம் நடைபெறும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தினமும் காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து கிளம்பி, மதியம் 12.40 மணியளவில் பெங்களூரையும், பெங்களூரில் மதியம் 2.15 மணிக்கு கிளம்பி இரவு 9 மணிக்கு கோயம்புத்தூரையும் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.