தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் அருகில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனைக்கும், காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது.
ஆனால், கொரோனா ஊரடங்கால் பல மாதங்களாக பார்க்க மூடப்பட்டு இருந்ததால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லாச் சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.சரவணன், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி, பார் நடத்த டாஸ்மாக்குக்கு அதிகாரம் இல்லாததால், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
மதுவிலக்கு சட்டம் சொல்வது என்ன?
1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்வதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம் என்று தெரிவிக்கிறது.
ஐகோர்ட்டில் மேல் முறையீடு
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி, டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளது.
பார்கள் நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரமில்லை என தனி நீதிபதி மேற்கோள்காட்டிய மதுவிலக்கு சட்டப்பிரிவு, பார் உரிமம் வழங்கும் விஷயத்துக்கு பொருந்தாது
டாஸ்மாக் கடைகள் அருகில் பார் அமைக்க கூடாது என எந்த வாதங்களும் முன்வைக்கப்படாத நிலையில், தனி நீதிபதி, பார்களை மூட வேண்டும் என பிறப்பித்த உத்தரவு தேவையற்றது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil