கொரோனா பொது முடக்க காலத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மது விற்பனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு இன்று முழுமையாக இல்லாததால் வழக்கு பட்டியல் இடப்படவில்லை என தெரிகிறது. புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்று மாலை ஏழு மணிக்கு பிறகு தெரியவரும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் பரவி வருகின்ற சூழலில், மத்திய அரசு பொது முடக்கத்தில் சில முக்கிய தளர்வுகளை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதில் மதுபான கடைகளுக்கும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மே 7-ம் தேதி சமூக இடைவெளி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், மதுபிரியர்கள் பல இடங்களில் தமிழக அரசின் சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று என்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மேலும் பரவலை வேகப்படுத்தும் விதமாக, டாஸ்மாக் கடைகள் திறந்ததை டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில அமைப்புகள் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதனை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், டாஸ்மாக் கடைகள் பொது முடக்கம் முடியும் வரை திறக்கப்பட கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஆன்லைன் மூலம் மது பானங்களை டெலிவரி செய்ய என்ன ஏற்பாடுகள் செயல்பாட்டில் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த முதல் நாளில்தான் கூட்டம் குவிந்தது. இரண்டாம் நாளில் கூட்டம் குறைந்ததால் தனிநபர் இடைவெளி, சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நிலைமை சீர் செய்யப்பட்டது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
கொரோனா பொது முடக்கத்தால் டாஸ்மாக் மூடப்பட்டதால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை முன்வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், பொதுமுடக்கம் முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது பற்றிய உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்று கூறப்பட்டது. மேலும், இந்த வழக்கில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த அமிர்த மஹாலட்சுமி மற்றும் மகளிர் ஆயத்தின் லட்சுமி மணியரசன் கேவியட் மனுக்களும் விசாரணைக்கு வருகிறது என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசின் டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்குஉச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், டாஸ்மாக் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.