டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.
டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, உச்சநீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 8) விசாரணை நடத்தப்படவுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சுமார் ரூ. 1,000 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், விசாரணை என்ற நோக்கத்தில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை முதலில் விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதன் விசாரணையில் இருந்து தாமாக விலகுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, நீதிபதிகள் எம்.எஸ். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. மேலும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பதில் மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதன் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர். இந்த சூழலில், அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி ராஜசேகரின் சகோதரர், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் வழக்கறிஞராக ஆஜராவதால், இந்த வழக்கை நீதிபதி ராஜசேகர் தொடர்ந்து விசாரிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்க மறுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் அமர்வில் முறையிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கை விசாரிக்கும் எம்.எஸ். சுப்பிரமணியம், ராஜசேகர் ஆகியோர் அமர்விலேயே முறையிடுமாறு தலைமை நீதிபதி வலியுறுத்தினார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டாஸ்மாக் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து, வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணை செய்யப்பட்டது. அதன்படி, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்பேரில், தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.