தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கணினிமயமாக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 மாதங்களில் இப்பணிகள் முடிவடையும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி நேற்று (ஆகஸ்ட் 21) தெரிவித்தார்.
ஈரோடு நகரில் ரூ.16.67 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, “கணினிமயமாக்கல் மூலம் டாஸ்மாக் மது விற்பனையை ஒழுங்குபடுத்த முடியும். மதுபானங்கள் வாங்கியது குறித்து ரசீது வழங்கப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பான அனைத்து முறைகேடுகளும் சரி செய்யப்பட்டுள்ளன, என்றார். “தற்போது, மாநிலத்தில் எங்கும் சட்டவிரோத பார்கள் செயல்படவில்லை. இது தொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். பணிமூப்பு அடிப்படையில் 2,000 பணியாளர்கள் எந்தவித பாகுபாடும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் குறித்து யாரும் கற்பனை புகார் கூற வேண்டாம்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டம்
சமீபத்தில், மாநிலம் முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன, அதன் பிறகு புதிய கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சில இடங்களில் மதுக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. மக்கள் புகார் தெரிவித்த பகுதிகளில் உள்ள கடைகள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் குறித்து பேசுகையில், “இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 1,045 நீர்நிலைகள் வருகின்றன. 960 நீர்நிலைகளில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் நீர் பற்றாக்குறையால் சோதனை ஓட்டம் தாமதமாகி உள்ளது. இதுவும் விரைவில் முடிக்கப்படும். இந்த திட்டம் காலதாமதம் ஆனதற்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சிதான் முக்கிய காரணம். அவர்களின் தவறுகளை நாங்கள் சரி செய்து வருகிறோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“