பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.600 கோடியை எட்டியுள்ளது.
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முதன்மையானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இந்த பொங்கல் பண்டிகையின் போது தீபாவளி பண்டிகையை விட கூடுதலாக ரூ.175 கோடி ரூபாய்க்கு மேல் மதுபான விற்பனை நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு புத்தாண்டின் போது எதிர்பார்க்கப்பட்டதை விட டாஸ்மாக் விற்பனை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.750 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்தது. இருப்பினும், ரூ.600 கோடிக்கு மது விற்பனையானாலும், கடந்தாண்டை காட்டிலும் இந்த பொங்கலுக்கு மது விற்பனை அதிகரித்துள்ளது. பொங்கல் தினத்தன்று 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது.
திருவள்ளுவர் தினமான 16-ம் தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், காணும் பொங்கல் தினமான 17-ம் தேதி மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் 600 கோடியை நெருங்கி இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிராந்தி தான் மதுப் பிரியர்களின் ஃபேவரைட்டாக இருந்தது என்றும், பொங்கல் பண்டிகையன்று மட்டும் 60 சதவிகித பிராந்தி விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஸ்கி, ஒயின், வோட்கா, பீர் போன்ற மதுபான வகைகள் 40 சதவிகிதம் விற்பனையானதாக மண்டல டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்.