டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க தடை கோரிய மனுவிற்கு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் மூலமாக தமிழக அரசு மது விற்பனை நடத்தி வருகிறது. மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்வதற்கு பதில், பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க அனுமதிப்பது என, 1996 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக இந்த அரசாணை அமல்படுத்தாமல் அரசு நிறுத்தி வைத்தது.
டாஸ்மாக் நிறுவனம் தற்போதைய சூழலில், 1996 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. எனவே மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க தடை கோரி, சென்னையைச் சேர்ந்த பிரதாப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், கண்ணாடி பாட்டில்களில் மதுபானங்கள் விற்கும் போது, அவை மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் மதுபான ஆலைகளுக்கு வழங்கப்படுகின்றன. கண்ணாடி பாட்டில்களால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. அதனை மறு சுழற்சி செய்ய முடியும். ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த முடியாது. இது சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தும். அதனால், பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதித்து 1996 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தற்போது தமிழகத்தில் மது பானங்கள் அனைத்தும் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதனை மாற்றி பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை செய்ய ரகசிய நடவடிக்கைகள் அரசும், டாஸ்மாக் நிறுவனமும் எடுத்து வருகின்றது எனவே இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜனவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.