தமிழகத்தில் டாஸ்மாக்கில் மதுபான விற்பனை தொடங்கப்பட்டு 4 நாட்களிலேயே மது விற்பனையின் அளவு குறைந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், பொது முடக்க காலத்தில் தமிழர்கள் குடிப்பழக்கத்தில் இருந்து விடுப்பட்டு திருந்துகிறார்களா? அல்லது பணம் இல்லாத காரணத்தால் குடிப்பதில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2015-ம் ஆண்டு டாஸ்மாக் மது விற்பனைக்கு எதிராக எழுந்த பரவலான போராட்டத்தை தொடர்ந்து, 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அறிவித்தது. இந்த ஐந்தாண்டு கால ஆட்சி நிறைவடைய இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவாகவே கால அவகாசம் உள்ள நிலையில் மதுவிலக்கு வாக்குறுதி அப்படியேதான் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதனால், டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன. மூன்றாம் கட்ட பொது முடக்க நீட்டிப்பின்போது சில ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு டாஸ்மாக் மது விற்பனையை அறிவித்தது.
இதையடுத்து, தமிழக அரசு மே 7-8 தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்தது. ஆனால், மதுவிற்பனையின்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பதால் டாஸ்மாக் மது விற்பனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.294.5 கோடிக்கு மது விற்பனை ஆனது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு கட்டுபாடுகளுடன் டாஸ்மாக் மது விற்பனை தமிழக முழுவதும் மீண்டும் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. சென்னை மாநகரம் உள்ளிட்ட சிவப்பு மண்டல பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மே 16-ம் தேதி டாஸ்மாக் மது விற்பனை மீண்டும் தொடங்கியபோது, டாஸ்மாக்கி மதுவாங்குவதற்கு மது பிரியர்கள் சில கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்றனர். அவர்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினரே சிரமப்பட்டனர். மது பிரியர்கள் கால் கடுக்க நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர்.
முதல் நாள் மட்டும் ரூ.163 கோடிக்கு விற்பனை ஆனது. மே 17-ம் தேதி 2வது நாளில் ரூ.133.1 கோடிக்கு விற்பனை ஆனது. மே 18 3வது நாளில் ரூ.108.3 கோடிக்கு விற்பனையானது. இப்படி, முதல் நாளில் உச்சபட்சமாக தொடங்கிய மது விற்பனை நான்காவது நாளில் 4வது நாளில் மே 19-ம் தேதி ரூ.91 கோடிக்கு விற்பனையாக படிப்படியாக சரிவைக் கண்டது.
இந்த 4 நாட்களில் டாஸ்மாக்கில் மண்டலவாரியாக எவ்வளவு மது விற்பனை ஆனது என்பதைப் பார்ப்போம்.
முதல் நாளான 16-ம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.4.2 கோடிக்கும் திருச்சி மண்டலத்தில் 40.5 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.33 .05 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது. முதல் நாளில் மதுரை மண்டலமே முதலிடம் பெற்றது.
2வது நாள் 17-ம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.5.6 கோடிக்கும், திருச்சி ரூ.32.5 கோடி,
மதுரை ரூ.34.8 கோடி, சேலம் ரூ.29.6 கோடி, கோவை ரூ.30.6 கோடிக்கும் மது விற்பனை ஆனது. 2வது நாள் மது விற்பனையிலும் மதுரை மண்டலமே முதலிடத்தில் முன்னிலை வகித்தது.
3வது நாள் மே 18-ம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.6.5 கோடிக்கும் திருச்சி ரூ.26.4 கோடி, மதுரை 28.6 கோடி, சேலம் ரூ.24.3 கோடி, கோவை ரூ.22.5 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்று உள்ளது. 3வது நாளிலும் மதுரைதான் முதலிடம்.
4வது நாள் மே 19-ம் தேதி ரூ.91 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.6.2 கோடி, திருச்சி ரூ.23.2 கோடி, மதுரை ரூ.22.2 கோடி, சேலம் ரூ.20.6 கோடி, கோவை ரூ.19.4 கோடிக்கும் டாஸ்மாக் மது விற்பனை ஆனது. நேற்று திருச்சி மண்டலம் மதுரை மண்டலத்தை பின்னுக்குத் தள்ளி அதிகப்பட்சமாக ரூ.23.2 கோடிக்கு மது விற்பனை செய்து முதலிடத்தை பிடித்தது.
இதன் மூலம் தமிழக முழுவதும் இந்த 4 நாட்களில் மட்டும் ரூ.495.4 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. டாஸ் மது விற்பனை அளவை ஒப்பிட்டு பார்த்தால் உச்சபட்சமாக முதல் நாளில் ரூ.163 கோடிக்கு ட் தொடங்கிய மது விற்பனை நேற்று ரூ.91 கோடியாக சரிந்துள்ளது. மேலும், விற்பனை சரியும் என்று கூறப்படுகிறது.
டாஸ்மாக் மதுவிற்பனை சரிவால் தமிழகத்தில் மதுபிரியர்கள், பொது முடக்க காலத்தில் மது பழக்கத்தில் இருந்து விடுபட்டு திருந்திவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், சமூக ஆர்வலர்கள் மது பிரியர்கள் திருந்தவில்லை. அவர்கள் திருந்தி இருந்தால், மே 7-8 தேதிகளில் மட்டும் மது விற்பனை ரூ.294 கோடிக்கு எப்படி மதுவிற்பனை நடந்திருக்கும். கடந்த 4 நாட்களில் ரூ.495 கோடிக்கு எப்படி மது விற்பனை ஆகியிருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
பொது முடக்கத்தால், மக்களிடம் பணப்புழக்கம் குறைவாக உள்ளது. மது பிரியர்களின் கைகளில் இருந்த பணமும் முதல் 4 நாட்களில் டாஸ்மாக் கடைக்கு வந்துவிட்டது. இதனால், இனிவரும் நாட்களில் மதுப்பிரியர்களின் கைகளில் மேலும் பணப்புழக்கம் குறையும் டாஸ்மாக் மது விற்பனை அளவு மேலும் சரியும் என்று கூறுகின்றனர். இதற்கு இனிவரும் நாட்களின் மதுவிற்பனை அளவுதான் பதிலளிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.