தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும் மற்றும் அதனுடன் தொடர்புடைய மது ஆலைகளில் கடந்த 6 ஆம் தேதி முதல் 3 நாட்கள் அதிரடியான சோதனையை நடத்தியது அமலாக்கத்துறை. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மது ஆலைகளும், பாட்டில் நிறுவனங்களும் சிறப்பாக ஒருங்கிணைந்து ரூ.1,000 கோடி கணக்கில் வராத பணத்தை ஒதுக்கியுள்ளன.
டாஸ்மாக் நிறுவனத்திடம் கூடுதலாக மது வழங்கும் ஆணை பெறுவதற்காக கையூட்டு வழங்க இந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியது. இதுதவிர போக்குவரத்து ஒப்பந்தம், பார் ஒதுக்கீடு, மதுப்புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது, பணியாளர்களை பணியிடமாற்றம் செய்ய கையூட்டு வாங்கியது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இவை அனைத்தும் 1988-ம் ஆண்டின் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி குற்றம் என்றும், இதன் மூலம் கிடைத்த பயன்கள் 2002-ம் ஆண்டின் கருப்புப்பண மாற்ற தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், 'மாநில அரசின் அனுமதியின்றி பி.எம்.எல்.ஏ., சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்துவதை அனுமதிக்கக் கூடாது. சோதனையின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.