டாஸ்மாக் வருமானம் மூலம் இயங்கும் பள்ளிகள் : தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணி நேற்று வேலூர் மாவட்டத்தில் நடத்த பள்ளித் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியின் போது அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
டாஸ்மாக் வருமானம்
அதுவரை பேசிக் கொண்டிருந்த கே.சி வீரமணி, தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அவர் அங்கிருந்து சென்ற பிறகு, மீண்டும் பேச ஆரம்பித்த கே.சி. வீரமணி “டாஸ்மாக் வருவாயில் கிடைக்கும் லாபத்தில் தான் பள்ளிகள் மற்றும் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்ட இயலுகிறது. அந்த பணத்தில் இருந்து தான் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது” என்று கூறினார்.
மேலும் அப்போது அங்கு குடித்துவிட்டு வந்த நபரைப் பார்த்து, நான் அவரிடம் குடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினால் நிச்சயமாக இது போன்ற நலத்திட்டங்கள் எல்லாம் செயல்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சர்ச்சை மிகுந்த பேச்சால் அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சகஜமற்ற தன்மை நிலவியது.