தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை(ஏப்ரல் 19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்ற அனல்பறந்த பிரச்சாரம் நேற்று மாலை உடன் ஓய்வு பெற்றது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று (17-ம் தேதி) முதல் நாளை (ஏப்.19) வரை 3 நாட்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி நேற்று மதுக்கடைகள் அடைக்கப்பட்டது. அதே போல் வாக்கு எண்ணிக்கை நாளாக ஜூன் 4-ந்தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுக்கடைகள் நேற்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் (ஏப்.16) மதுபானங்கள் வாங்க மதுபிரியர்கள் குவிந்தனர். கடைகள் முன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
இதுகுறித்து பேசிய டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், "டாஸ்மாக் மதுவிற்பனை ஏப்ரல் 16-ம் தேதி வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.68.35 கோடிக்கு மது விற்பனை ஆனது. திருச்சியில் ரூ.58.65 கோடி, சேலத்தில் ரூ.57.30 கோடி, மதுரையில் ரூ.55.87 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.49.10 கோடி என ஒரே நாளில் ரூ.289.29 கோடிக்கு மதுவிற்பனை ஆனது. தமிழகத்தில் வழக்கமான நாட்களை காட்டிலும், ஏப்ரல் 16-ம் தேதி விற்பனை 2 மடங்கு அதிகமாகும்" என்று கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“