Advertisment

டாஸ்மாக் மது விற்பனையில் கலால் வரி ஏய்ப்பு; ரூ4 லட்சம் கோடி மோசடி: அன்புமணி பரபரப்பு புகார்

"அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்கப்படும் மதுப்புட்டிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியோ செலுத்தப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன" - அன்புமணி ராமதாஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anbumani ramadoss

தமிழக அரசின் டாஸ்மாகில் மதுபானங்கள் விற்பனை வரி செலுத்தாமல் விற்கப்படுவதாகவும், இதனால் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு வைக்கிறார்.

Advertisment

இதைப்பற்றி அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது, "தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுப்புட்டிகளில் பெரும்பாலானவற்றுக்கு கலால் வரி மற்றும் விற்பனை வரி செலுத்தப்படாமல் ஏய்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை; அரசுக்கு வருவாய் வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும் மதுவணிகத்தில் வரி ஏய்ப்பு செய்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு திருப்பி விடப்படுவதை மன்னிக்க முடியாது.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் நச்சு சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பேருக்கரணை கிராமத்தில் நச்சு சாராயம் குடித்து ஐவரும் உயிரிழந்தது மதுவால் ஏற்படும் சீரழிவுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் சந்து கடைகள் என்ற பெயரில், ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கு கீழும் 5 முதல் 10 சட்டவிரோத மதுக்கடைகள் இயங்குகின்றன.

அங்கு 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகவும், அவ்வாறு விற்கப்படும் மதுப்புட்டிகள் எதற்கும் கலால் வரியோ, மதிப்புக் கூட்டு வரியோ செலுத்தப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களே இந்த வரி ஏய்ப்பை உறுதி செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுப் புட்டிகளில் மூன்றில் ஒரு பங்குக்கு மட்டும் தான் முறைப்படி கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி செலுத்தப்படுவதாகவும், மீதமுள்ள இரு பங்கு மதுப்புட்டிகள் எந்த வரியும் செலுத்தப்படாமல் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் கூறப்படும் புகார்களை நம்பாமல் இருக்க முடியவில்லை.

இக்குற்றச்சாட்டை நிதியமைச்சராக பணியாற்றிய பழனிவேல் தியாகராஜனும் உறுதி செய்திருக்கிறார். கடந்த ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கலால் வரி ஏய்ப்பு பற்றி அவர் கூறிய தகவல்கள் முக்கியமானவை.

‘‘தமிழகத்தில் ஆயத்தீர்வை வளையத்திற்கு வெளியே விற்பனை செய்யப்படும் மதுவின் அளவு மிகவும் அதிகம். அதிகபட்சமாக 50% அளவுக்கு இது இருக்கலாம். சிறந்த தொழில் நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பை பயன்படுத்தி இதைத் தடுப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும்.

மதுபாட்டில்கள் மீது ஹோலோகிராம் முத்திரை ஒட்டும் இப்போதைய முறை பயனற்றது. டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் கருவிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப் படவில்லை. மது விற்பனை அமைப்பு அடிப்படையாக மேம்படுத்தப்படவேண்டும்’’ என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறி இருந்தார். அதற்குப் பிறகும் கலால் வரி ஏய்ப்பைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டாஸ்மாக் மது வணிகத்தில் செய்யப்படும் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தால், அது அரசின் கலால் மற்றும் விற்பனை வரி வசூலில் எதிரொலித்திருக்கும். ஆனால், அவ்வாறு தெரியவில்லை. கடந்த 2021-22ஆம் ஆண்டில் கலால் வரி ரூ.8236.60 கோடி, மதிப்புக் கூட்டு வரி ரூ.27,814.05 கோடி என மொத்தம் ரூ.36,050.65 கோடி மதுவணிகத்தின் மூலம் வருவாயாக கிடைத்தது.

கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டிருந்தால், மது வணிகத்தின் மூலமான வருவாய் 2022-23ஆம் ஆண்டில் ரூ.72,000 கோடியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், 2022-23ஆம் ஆண்டில் மது வணிகத்தின் மூலமான வருவாய் ரூ.44,098 கோடி மட்டும் தான்.

கலால் வரி உயர்வு காரணமாக மதுப்புட்டிகளின் விலை அதிகரிக்கப்பட்டதும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் எண்ணிக்கை 553 ஆக அதிகரிக்கப்பட்டதால் மது விற்பனை உயர்ந்ததும் தான் வருவாய் அதிகரிக்க காரணமே தவிர, வரி ஏய்ப்பு தடுக்கப்பட்டது அல்ல.

டாஸ்மாக் மது வணிகத்தில் கலால் மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஏய்ப்பு கடந்த 20 ஆண்டுகளாகவே நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. வரி ஏய்ப்பை நிதியமைச்சரே சுட்டிக்காட்டியும் அது சரி செய்யப்படவில்லை என்றால், வரி ஏய்ப்பு என்பது தவறுதலாக நடக்கவில்லை; திட்டமிட்டே செய்யப் படுகிறது என்று தான் பொருள் ஆகும். இது இனியும் தொடருவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுவின் அளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டும் தான் வரி செலுத்தப்படுகிறது; இரு பங்குக்கு வரி செலுத்தப்படுவதில்லை என்று இப்போது புகார்கள் எழுந்துள்ளன. 50% மதுப்புட்டிகளுக்கு கலால் வரி செலுத்தப்படவில்லை என்று நிதியமைச்சரே கூறுகிறார். இவை உண்மை என்றால் அது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அப்பட்டமான தோல்வி ஆகும்.

கலால் வரி ஏய்ப்பு என்பது ஆயத்தீர்வை துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மது ஆலையும் தனித்து இயங்குவதில்லை. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு மதுப்புட்டிக்கும் கலால் வரி செலுத்தப்படுவதையும், மதுப்புட்டிகள் டாஸ்மாக் கிடங்கைத் தவிர வேறு எங்கும் செல்லாமல் இருப்பதையும் உறுதி செய்யவும் ஒவ்வொரு ஆலையிலும் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர்.

அவர்களின் கண்காணிப்பை மீறி வரி ஏய்ப்பும், கள்ளச் சந்தைக்கு செல்வதும் நடக்காது. தமிழகத்தில் உள்ள மது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுவின் அளவும், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் அளவும் சமமாக இருக்கிறதா என்பதை தமிழக அரசின் ஆயத்தீர்வை துறை ஆய்வு செய்திருந்தாலே இந்த வரி ஏய்ப்பு அம்பலமாகியிருக்கும். ஆனால், அதை ஆயத்தீர்வைத்துறை செய்ததா? எனத் தெரியவில்லை.

கலால் வரி ஏய்ப்பை கண்டுபிடிப்பது இப்போதும் கூட கடினமானது அல்ல. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 11 மது ஆலைகள், 7 பீர் ஆலைகளில் கடந்த காலங்களில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் பட்டது? எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த ஆலைகளில் எவ்வளவு மது மற்றும் பீர் தயாரிக்கப்பட்டது என்பதை கணக்கிட முடியும். எந்த அளவுக்கு மதுவும், பீர் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டனவோ, அதே அளவுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை மிகவும் எளிதாக கண்டறிய முடியும். அதை இன்று வரை ஆயத்தீர்வைத் துறை செய்யாதது ஏன்?

முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியவாறு 50% மதுப்புட்டிகளுக்கு கலால் வரியும், மதிப்புக் கூட்டு வரியும் செலுத்தப்படவில்லை என்றால், கடந்த 20 ஆண்டுகளில் மது வணிகத்தின் மூலம் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்திருக்குமோ, கிட்டத்தட்ட அதே அளவு, அதாவது ரூ.3 லட்சத்து 90,713.86 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

இது தமிழ்நாடு அரசின் நேரடிக் கடனில் 60 விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். தமிழக அரசின் வரலாற்றில் இது தான் மிகப்பெரிய வருவாய் இழப்பாகும். இது உண்மை எனில், இதை எளிதில் கடந்து செல்ல முடியாது; கடந்து செல்லக் கூடாது.

தில்லியில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் மது கலால் வரிக் கொள்கையை வகுத்ததால் பெரும் புயல் எழுந்துள்ளது. அது தொடர்பான விசாரணை தில்லியில் தொடங்கி தெலுங்கானா வரையிலும் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டிலும் கடந்த 20 ஆண்டுகளாக கலால் வரி மற்றும் விற்பனை வரி செலுத்தப்படாமல் மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் புகாரின் உண்மைத்தன்மை குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதற்காக, கலால்வரி மற்றும் விற்பனை வரி ஏய்ப்பு குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்", என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14-ஐ தொட்டது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மது குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

publive-image

இந்தநிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "சமூக அக்கறை இல்லாத மதுவிலக்குத் துறை அமைச்சரை மாற்றவேண்டும். அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்றவேண்டும். இந்த தலைமுறை மது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கியுள்ளன.

தமிழகம் மற்றும் ஜிப்மரில் கூட Methyl alcohol poisoning antidote என்ற மருந்து இல்லை. அது இருந்திருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். அந்த மருந்து வெளிநாடுகளில் உள்ளது. தமிழகத்தில் சாராயம் இருக்கக் கூடாது என்று முதல்வர் கூறியிருந்தால், மதுவிலக்குத் துறையை என் கண்காணிப்பில் விடுங்கள். அவரின் லட்சியத்தை நிறைவேற்றுவேன். மதுவிலக்கை குஜராத், பிஹாரில் நடைமுறைபடுத்தும்போது இங்கு ஏன் நடைமுறைப்படுத்த முடியாது?

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் மதுப்புட்டிகளில் பெரும்பாலானவற்றுக்கு கலால் வரி மற்றும் விற்பனை வரி செலுத்தப்படாமல் ஏய்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை; அரசுக்கு வருவாய் வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும் மதுவணிகத்தில் வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு திருப்பி விடப்படுவதை மன்னிக்க முடியாது.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் நச்சு சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பேருக்கரணை கிராமத்தில் நச்சு சாராயம் குடித்து ஐவரும் உயிரிழந்தது மதுவால் ஏற்படும் சீரழிவுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbumani Ramadoss Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment