டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 90 மி.லி. மதுவை டெட்ரா பேக்கில் அடைத்து விற்கும் எந்த முடிவும் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தால் எடுக்கப்படவில்லை என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டில்களில் மது விற்கப்படுகிறது. இதற்கு கூடுதல் செலவாகிறது என்பதோடு பாட்டில்களின் மறுபயன்பாடு என்பதும் முழு அளவில் இல்லை. அதனால், டாஸ்மாக்கில் முதலில் 90 மி.லி மது டெட்ரா பேக்குகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது.
அதே நேரத்தில், கள்ளச்சாராயத்தைத் தடுக்க டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்கப்படுவதாகவும் சமூகவலைதளங்களில் பேசப்பட்டது.
இதையடுத்து, கள்ளச்சாராயத்தைத் தடுக்க டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்கத்
திட்டமா என்று கேட்டு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மிலி மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மீட்டெடுக்க முடியாத கலாச்சார சீரழிவு படுகுழிக்குள் தள்ளப்பட்டு விடும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 90 மி.லி. மதுவை டெட்ரா பேக்கில் அடைத்து விற்கும் எந்த முடிவும் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தால் எடுக்கப்படவில்லை என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 90 மி.லி மதுவை டெட்ரா பேக்குகளில் விற்பதற்கான முயற்சியோ, கருத்துருவோ தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெட்ரா பேக்கில் டாஸ்மாக் மது என செய்திகள் பரவிய நிலையில், இந்த நிமிடம் வரை அப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“