தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொழிப் பாடங்கள் முடிவடைந்துள்ளன. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. அதில் ஒன்றான தக்கலை கல்வி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏப்ரல் 6-ம் தேதி மாணவர்கள் தேர்வு எழுதினர். மையத்தின் தேர்வறை கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவிபெறும் மேல் நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் வேலவன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
தேர்வு அறையில் மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில், ஆசிரியர் வேலவன் அறையில் நடந்து கண்காணித்து வந்தார். இந்நிலையில், கடைசி பெஞ்சில் தேர்வு எழுதிய 3 மாணவிகளில் ஒருவரை வேலவன் தோளிலும், முதுகிலும் தொட்டு பேசி கேள்விகளில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என கேட்டதாக கூறப்படுகிறது. இதனை முதலில் சாதாரணமாக கருதிய அந்த மாணவி, பின்னர் மீண்டும் அவ்வாறு செய்ததாகவும், அருகிலேயே நின்று கொண்டிருந்ததகாவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் அந்த மாணவிக்கு தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு சென்ற மாணவி பெற்றோரிடம் ஆசிரியரின் சீண்டல் குறித்து தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் இடம் புகார் தெரிவித்துள்ளனர். அதோடு தக்கலை மற்றும் குழித்துறை வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் நாகர்கோவிலில் மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும்
ஆசிரியர் வேலவனின் அநாகரீக செயல் குறித்து புகார் அளித்துள்ளனர். இதன் பின்னர் இச்சம்பவம் குறித்து குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் வேலவனைக் கைது செய்தனர். மாவட்ட கல்வி அதிகாரி புகழேந்தி ஆசிரியர் வேலவன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிட்டார். ஆசிரியரின் இச் சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: த.இ.தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“