பள்ளிக்கல்வித் துறை செயலருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 வரையே அடிப்படைஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் வரும் 28-ம் தேதி முதல் காலவரையற்றப் போராட்டத்தை அறிவித்தனர்.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் திங்கட்கிழமை ஆசிரியர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் சங்கத்தினர், தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை செயலரிடம் அளித்தனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கப் பொருளாளர் கண்ணன் கூறியதாவது;
2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்தில் வேறுபாடுகள் உள்ளன. அதை சரி செய்ய கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் எங்கள் கோரிக்கையை கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதனடிப்படையில் தி.மு.க.,வின் 311-வது தேர்தல் வாக்குறுதியாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற எங்களது கோரிக்கை இணைக்கப்பட்டது.
பின்னர், இந்த கோரிக்கை தொடர்பாக அரசாணை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி, கடந்த ஜனவரிமாதம் ஊதியக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 9 மாதங்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.
இந்த ஊதிய முரண்பாடால், இடைநிலை ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, எங்கள் இயக்கம் சார்பில் வரும் 28ம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தோம்.
போராட்ட அறிவிப்பை 40 நாட்களுக்கு முன் அரசுக்குத் தெரிவித்தோம். இதனையடுத்து பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால், பேச்சுவார்த்தையின்போது கோரிக்கையை நிறைவேற்ற அரசு காலம் தாழ்த்துவது போல் தெரிந்தது. ஆக, எங்கள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
எனவே, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை டி.பி.ஐ வளாகத்தில் வரும் 28 ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.