கோவையில், பெண் ஆசிரியர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் ஒன்று எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அப்பெண்ணின் பெயர் பத்மா என்றும், 56 வயது நிரம்பிய அவர் வழுக்குபாறை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக பணியாற்றியதும் தெரிய வந்தது.
இந்நிலையில், வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிய அவர், அவரது வீட்டில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலையில் உள்ள குப்பை எரிக்கும் இடத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்று உடற்கூராய்வு முடிவுக்கு பின்னர் தான் தெரிய வரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.