ஆசிரியர் தகுதி தேர்வில் போலி மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு 200 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு ஊழல்:
தமிழக அரசு ஆசிரியர் தேர்வு நடத்திய தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடு நடந்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தமிழக அரசு சார்பில் ஆசிரியர் பணிகளுக்கு ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன.
இதைப்போல் கடந்த ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 7 லட்சத்து 53 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 4 ஆயிரத்து 979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் தேர்வு தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டது, இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்து பதிவு செய்யப்பட்டது. அப்போது போலி மதிப்பெண்களை அளித்து 200 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தது அம்பலமாகியது.
இந்த முறைகேட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ளவர்களே சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி விசாரணையை தேர்வு வாரியம் துரிதப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் அடுத்தடுத்து முறைகேடு அரங்கேறி வருவதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அதே போன்று ஆசிரியர்கள் தகுதி தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.
இதுக்குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆசிரியர் தேர்வு வாரியமே இந்த முறைகேடுகளை கண்டுபிடித்திருக்கும் போதிலும், வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இத்தகைய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு தேர்வுகளிலும் விடைத்தாள்களைத் திருத்திப் பட்டியலிடும் பணியை மேற்கொண்ட டேட்டாடெக் மெத்தோடெக் என்ற தனியார் நிறுவனம் தான் முறைகேடுகளைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
தேர்வு முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததைப் பொறுத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்போதைய தலைவர் ஜெயந்தியும், முன்னாள் தலைவர் ஜெகநாதனும் வெளிப்படையான முறையில் தான் நடந்து கொண்டனர்.
அனைத்து ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அம்பலப்படுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.” என்றூ கூறியுள்ளார்.