திருவெறும்பூர் அருகே குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்ட அனுமதி தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பள்ளி ஆசிரியை கிராம சபை கூட்டத்தில் பதாகை ஏந்தி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்தில் காவலராகவும், இவரது மனைவி கவிதா லட்சுமணப்பட்டி உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட அயன்புதூர் பகுதியில் வீட்டுமனை வாங்கி உள்ளனர். அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு கடந்த ஜனவரி மாதம் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் அந்த வீட்டு மனைக்கு செல்லும் வழியில் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளதாகக் கூறி அனுமதி கொடுக்க காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குண்டூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபா கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு வந்த கவிதா குண்டூர் ஊராட்சியை கண்டித்து குண்டூர் ஊராட்சியில் பொம்மை தலைவரை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி விளம்பர பதாகை ஏந்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் மற்றும் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி திருமுருகன் மற்றும் கவிதா அவரது கனவர் பாஸ்கரன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையில் வழக்கு தொடுத்துள்ள நபரையும், வீட்டுமனை போட்டு உள்ள நபரையும் அழைத்து பேசுவதுடன் வழக்கு, வீட்டுமனை உள்ள இடத்திற்கு இருந்தால் அதற்கு அனுமதி தர வேண்டாம் என்றும் இல்லை என்றால் அவருக்கு வீடு கட்ட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதாக ஸ்ரீதர் தெரிவித்தார். இதனால் குண்டூர் கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”