தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இந்திரா காந்தி உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள், 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க கோரியும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத காரணத்தைக் கூறி, தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறி, அனைத்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், ஆசிரியர் தகுதத் தேர்வு முடிக்காத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், நோட்டீசுக்கு பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கி, அவர்களின் பதிலைப் பெற்று, அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
ஏற்கனவே எட்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்கு எந்த கருணையும் காட்ட முடியாது எனவும், எனவே தேர்வு எழுதாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டர்.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தகுதி தேர்வு அறிமுகப்படுத்தி ஒன்பது ஆண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு முறை என இதுவரை 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கவேண்டும், ஆனால் தமிழகத்தில் இதுவரை மூன்று முறைதான் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் உரிய அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் தனி நீதிபதி தேசிய தகுதி தேர்வை அடிப்படையாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அது தவறான கருத்து என்றும் தமிழக ஆசிரியர்கள் தேசிய தகுதி தேர்வை எழுத முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது கூட தேர்வு அறிவிப்புதான் வெளியாகி உள்ளதாகவும் எப்போது தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தனர்.
தனி நீதிபதி முன்பு தாங்கள் மனுதார்ர் இல்லை என்பதால்,
இந்த மேல்முறையீட்டை வழக்கை, பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு அனுமதிப்பதாகவும், மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்து அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்.