இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சியை புறக்கணிப்பதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, நூற்றுக்கணக்கான இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5,200 வரையே அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைத்து வழங்கப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் வரும் 28-ம் தேதி முதல் காலவரையற்றப் போராட்டத்தை அறிவித்தனர்.
போராட்டம் 5 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச் சங்கம் ஆகிய நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. ”முதலமைச்சரிடம் கோரிக்கைகளை தெரிவித்து நல்ல தகவல்களுடன் மீண்டும் வருகிறேன் என்று அமைச்சர் பிரதிநிதிகளிடம் கூறினார். அவரது பதிலுக்காக காத்திருக்கிறோம்,” என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறினார்.
இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சியை புறக்கணிப்பதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். ”பயிற்சி திட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்" என்று இரண்டாம் நிலை மூப்பு ஆசிரியர் சங்கத்தின் பொருளாளர் கே.கண்ணன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“