இனி பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் கல்விச் சான்றிதழ்களையும் ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்தார். அப்போது, "பாலியல் குற்றச் சம்பவங்கள் சில இடங்களில் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். குறிப்பாக, சட்டத் திருத்தமும் இந்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் எவ்வாறு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும், அதற்கு எந்த மாதிரியான தண்டனைகள் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவை மட்டுமின்றி, பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித் தகுதியை ரத்து செய்யும் நடவடிக்கையும் இனி முன்னெடுக்கப்படும். அவர்களின் கல்விச் சான்றுகள் அனைத்தும் ரத்து செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, தலைமை பண்புகள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஏறத்தாழ 6 ஆயிரம் தலைமை ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ள இருக்கிறோம்" என அவர் கூறினார்.