சென்னை, அமைந்தகரை பகுதியில் வீட்டில் வேலை பார்த்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நியாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதா என்கிற நஸ்ரியா. இவர்கள் வீட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தஞ்சாவூரைச் சேர்ந்த சுமார் 13 வயதான சிறுமி வேலை பார்த்து வந்தார். இச்சிறுமி கடந்த தீபாவளியன்று அவர்கள் வீட்டில் உள்ள குளியலறையில் சடலமாக கிடந்ததாக வழக்கறிஞர் மூலம் வீட்டின் உரிமையாளர் நவாஸ் போலீசில் புகாரளித்தார்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் சடலத்தை மீட்ட போலீசார், சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்து, அச்சிறுமி வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர்களை விசாரித்தனர். அப்போது, பல அதிர்ச்சிகர தகவல்கள் தெரிய வந்தன. அதன்படி, தீபாவளியன்று நவாஸ், நஸ்ரியா மற்றும் இவர்களது நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெய்சக்தி ஆகியோர் சேர்ந்து சிறுமியை கடுமையாக தாக்கி, அயன்பாக்ஸால் சூடு வைத்துள்ளனர். இதில் மயக்கமடைந்த சிறுமியை குளியலறையில் அடைத்து விட்டு, பின்னர் அங்கிருந்து கிளம்பி தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அதன்பின்னர், லோகேஷ் மூலம் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து காவல்துறைக்கு புகாரளித்தது கண்டறியப்பட்டது. அதன்பேரில், நவாஸ் மற்றும் நஸ்ரியா கைது செய்யப்பட்ட நிலையில், போக்சோ மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டங்கள் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“