By: WebDesk
Updated: January 12, 2019, 08:15:17 PM
tehelka kodanad video fir filed on mathew samuel – கொடநாடு வீடியோ விவகாரம்: தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மீது வழக்குப்பதீவு
கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஆசிரியர் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவரின் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளானதில் அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். சயான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்து வந்த தினேஷ் குமார் என்பவரும் மரணம் அடைந்தார். அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இதற்கிடையே கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சயான் மற்றும் கேரளாவை சேர்ந்த தீபு, சதீசன், உதயகுமார், குட்டி பிஜின், வாளையார் மனோஜ் சாமியார், வயநாட்டை சேர்ந்த மனோஜ், சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல மாதங்களாக வாய் திறக்க மறுத்து வந்த சயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணப்படத்தை நேற்று டெல்லி பிரஸ் கிளப்பில் மேத்யூஸ் வெளியிட, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த வீடியோவில் வெளியாகி உள்ள தகவல்களில் உண்மையில்லை என்றும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை பற்றி வீடியோ வெளியிட்ட மேத்யூஸ் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆவணப்படத்தில் பேட்டியளித்த சயன் மனோஜ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு மாநில இணைத் தலைவர் ராஜன் சத்யா அளித்த புகாரின்பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.