தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திமுக செயல் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமாக மு.க. ஸ்டாலினை சென்னையில் இன்று சந்திக்கிறார்.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ்; பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் அல்லாத கூட்டாட்சி முன்னணி(பெடரல் பிரண்ட்) என்னும் 3-வது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் முன்னதாக, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா ஆகியோரைச் சந்தித்து பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் ஆதரவைத் திரட்டினார். இந்நிலையில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாகத் திகழும் தி.மு.க.வின் ஆதரவைப் பெறுவதற்காக ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இன்று மதியம் சந்திரசேகர ராவ் வருகிறார்.

அவர் முதலில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார். பின்னர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 3-வது அணிக்கு ஆதரவு கேட்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சென்னையில் நாளை மதியம் வரை தங்கியிருக்கும் சந்திரசேகர ராவ் மேலும் பல தமிழக கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து 3-வது அணி முயற்சிக்கு ஆதரவு திரட்டுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

×Close
×Close