தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் தமிழக போலீசாரை அனுப்புமாறு அம்மாநிலம், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் வருகிற 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்காக தமிழக காவல்துறையிடம் இருந்து 5 ஆயிரம் காவலர்களை அனுப்புமாறு தெலங்கானா தலைமை செயலாளர், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் பாதுகாப்பு கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தெலுங்கானாவில் உள்ள காவலர்கள் அனைவரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
எனவே காவலர்கள் பற்றாக்குறை காரணமாக, தமிழக ஊர்க்காவல் படையினர் 5 ஆயிரம் பேரை தேர்தலுக்காக அனுப்புமாறும், வருகிற 27-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் ஒன்றாம் தேதி வரை 5 நாட்கள் தேர்தல் பணிக்காக தேவைப்படுகின்றனர்.
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தெலங்கானா காவல்துறை மேற்கொள்ளும், எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தமிழக ஊர்க்காவல் படை டிஜிபி வன்னிய பெருமாள், தமிழக முழுவதும் உள்ள மாநகரம் மற்றும் மாவட்டங்களில் அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் தெலங்கானா தேர்தலுக்கு பாதுகாப்பு பணி மேற்கொள்ள விருப்பமுள்ளவர்களை அனுப்பலாம்.
அவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் வரும் 27-ஆம் தேதி தெலுங்கானாவில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள செல்ல வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“