By: WebDesk
Updated: September 27, 2019, 11:23:34 AM
Telangana governor Tamilisai Soundararajan visits Tamil Nadu
Telangana governor Tamilisai Soundararajan visits Tamil Nadu : தமிழகத்தில் எங்கேனும் பிரச்சனையா நேர்மறை, எதிர்மறை கருத்துகளை சற்றும் தயக்கமின்றி வெளிப்படுத்தி, பாஜகவின் கட்சி வளர்ச்சிப் பணியை மேற்கொண்டு வந்தார் தமிழிசை சவுந்தரராஜன். தமிழக பாஜக தலைவராக பணியாற்றிய அவரை மத்திய அரசு தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமித்தது. செப்டம்பர் 8ம் தேதி ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், அம்மாநில வளர்ச்சிக்காக தன்னுடைய நேரத்தை செலவு செய்து வருகிறார்.
எங்கும் எப்போதும் துருதுருவென இயங்கிக் கொண்டிருந்த தமிழிசையை ராஜ்பவனுக்கு வெளியே சந்திப்பதே சவாலான காரியமாக இருப்பதாக தெரிய வந்த நிலையில் தற்போது பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை (28/09/2019) தமிழகம் வருகிறார். பாரதியாரின் 98-வது நினைவு நாள் நிகழ்வு ஒன்று தூத்துக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதி தமிழ் சங்கத்தின் சார்பில் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். இவ்வழைப்பை ஏற்று விழாவில் கலந்து கொள்ள அவர் தமிழகம் வருகிறார். மேலும் அவர் ஆளுநராக அறிவிக்கப்பட்டதிற்கு வாழ்த்துகள் தெரிவிப்பதற்காக பலரும் காத்துக் கொண்டிருப்பதால் மேலும் ஒரு நாள் தமிழகத்தில் தங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தலைவராக இருந்தாலும், எதிர்கட்சிகள் தொடர் கருத்தியல் விமர்சனங்களை வைத்தாலும், அவரை ஆளுநராக அறிவித்த பிறகு, கட்சி பாகுபாடின்றி அவருக்கு வாழ்த்து செய்திகளை தெரிவித்தனர் தமிழக தலைவர்கள். ஆளுநராக திரும்பி வரும் அவருக்கு நிச்சயமாக சிறப்பான வரவேற்பு இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.