Advertisment

தெலுங்கானா மாநிலத்தில் பாஜகவின் கரன்சி பாலிடிக்ஸ் கலாச்சாரம்..  டி.ஆர். பாலு கண்டனம்

பாஜக கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிப்பதற்காகப் பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி, விலைபேசி தங்கள் பக்கம் இழுக்கும் போக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Telangana

Telangana mla poaching

தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக சதித்திட்டம் போட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் சந்திரசேகரராவ் குற்றம்சாட்டினார். அதுதொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

Advertisment

இதுதொடர்பாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்; தெலங்கானா மாநிலத்தின் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரை, தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக தரப்பில் நடத்தப்பட்ட பண பேரம் தொடர்பான தகவலை வெளியிட்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்எனக் கூறியிருக்கிறார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்திய துணைக் கண்டத்தின் ஒருமைப்பாட்டுக்கும், இந்திய அரசியல் சாசனத்திற்கும் எதிரான நிலைப்பாடுகளை மத்திய ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவும் அதன் தலைவர்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதையும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்கிற பாஜகவின் நிலைப்பாடுகளின் நீட்சியாக, இந்தியாவில் ஒரே கட்சி, ஒரே தலைவர் என்கிற ஜனநாயக விரோத நிலையைக் கொண்டு வர முயல்வதையும் பலமுறை திமுக சுட்டிக்காட்டியிருக்கிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுதொடர்பான கருத்துகளை அவ்வப்போது வலுவுடன் எடுத்து வைத்திருக்கிறது.

மாநிலக் கட்சிகளும், பாஜகவிற்கு மாற்றாக உள்ள கட்சிகளும் எந்தெந்த மாநிலங்களில் ஆட்சி செய்கின்றனவோ, அங்கெல்லாம் பாஜக கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிப்பதற்காகப் பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி, விலைபேசி தங்கள் பக்கம் இழுக்கும் போக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது.

இந்தியா முழுக்க நாங்கள் மட்டுமே ஆட்சி செய்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக பாஜகவால் மேற்கொள்ளப்படும் இத்தகைய மோசமான செயல்பாடுகளின் தொடர்ச்சிதான் இப்போது தெலங்கானா மாநிலத்திலும் அரங்கேறியிருக்கிறது. மாநிலங்களில் “ஆட்சிக் கவிழ்ப்பு” என்பது மத்திய அரசின் “ஆயுதமாவது” ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது.

குறிப்பாக தெலங்கானா மாநிலத்தில், பாஜகவின் தேசியத் தலைவர்களின் பெயர்களைச் சொல்லியே விலை பேசப்பட்டிருப்பது குறித்தும், வெளிப்படையான பேரம், எதிர்காலச் சலுகைகள் குறித்த உத்தரவாதம் அளித்தல் என அனைத்துவிதமான சட்டவிரோதச் செயல்பாடுகளைப் பற்றிய பேச்சுவார்த்தைகளும் இதில் வெளிப்படுவதால் முழுமையான விசாரணை மூலம் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதைத் திமுக வலியுறுத்துகிறது.

ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மந்தைகளல்ல என்பதையும் பாஜக நினைவில் கொள்ள வேண்டும்.

ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தையும் காலில் போட்டு மிதித்தபடி, மாநிலக் கட்சிகளின் அரசுகளுக்கு நெருக்கடியை உண்டாக்க நினைக்கும் இத்தகைய ‘கரன்சி பாலிடிக்ஸ்’ கலாசாரத்தை இந்திய மக்கள் எந்தக் காலத்திலும் ஏற்க மாட்டார்கள்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உரிய நேரத்தில் தீர்ப்பு வழங்குவார்கள் என்பதையும் நினைவில் கொள்க என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு டி. ஆர். பாலு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment