தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா முதல்வரான கே.சி.ஆர். என்றழைக்கப்படும் சந்திரசேகர் ராவ், பாஜக - காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த கே.சி.ஆர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தொடர்ந்து அப்பாயிண்ட்மென்ட் கேட்டு வந்தார். ஏற்கனவே, காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக, தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு கட்சியின் தலைவரை எப்படி சந்திக்கும் என்று ஐயம் எழுந்த நிலையில், எந்தவித நெருடலும் இன்றி சந்திர சேகர் ராவ்-ஐ சந்திக்க ஒப்புக் கொண்டார் மு.க.ஸ்டாலின்.
இதனால் தேசிய அளவில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை 4 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு கே.சி.ஆர் சென்றார். அவரை பூங்கொத்து கொடுத்து ஸ்டாலின் வரவேற்க, துரைமுருகன் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.
சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் முடிவில், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கே.சி.ஆர். கைக் குலுக்கிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார். இன்று இரவே அவர் ஹைதராபாத் திரும்புகிறார்.
இந்நிலையில், திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'மு.க.ஸ்டாலின் - சந்திர சேகர் ராவ் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.