சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை பதிவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கிய வெப்பம் மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்தது.
இதற்கு காரணம், வங்க கடலில் உருவான மோச்சா புயல் காரணமாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.
இந்த நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் நேற்றை விட இன்று அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "சென்னையில் இன்று நேற்றை விட வெப்பம் அதிகமாக இருக்கப் போகிறது.
நேற்று மீனம்பாக்கம் தான் மாநிலத்திலேயே அதிக வெப்பம் பதிவான இடமாக இருந்தது. இன்றும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை பதிவாக வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக அதிக பட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 105 டிகிரி வெப்பம் பதிவான நிலையில், இன்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடுமையாக வெயில் இருக்கும் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil