மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் நினைவாக கட்டப்பட்ட ‘பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., தமிழர் குலசாமி அம்மா திருக்கோவில்’ கோவிலை எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள டி.குனத்தூரில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் தங்களின் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த கோவில் திறப்பு விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் தமிழக மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள். தமிழக மக்களுக்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த தலைவர்களுக்காக இந்தக் கோயிலைக் கட்டிய சகோதரர் உதயகுமாருக்கு நன்றி. அவர் (உதயகுமார்) அனைத்து அ.தி.மு.க.வினர் சார்பாக இந்த கோவிலை கட்டியுள்ளார். வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அம்மா ஆட்சி அமைப்போம்,'' என்றார்.
அம்மா பேரவை ஒருங்கிணைப்பாளரான ஆர்.பி.உதயகுமார் மேற்பார்வையில், சில மாதங்களிலேயே கோவில் கட்டும் பணி நடந்து முடிந்தது. 50 லட்சம் மதிப்பீட்டில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
400 கிலோ எடையுள்ள, 7 அடி உயரமுள்ள, தமிழக முன்னாள் முதல்வர்கள் இருவரின் வெண்கலச் சிலைகள், பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு வேத பாசுரங்கள் முழங்க கோவிலில் நிறுவப்பட்டது. அதற்கு அருகே, இரண்டு வெண்கல சிங்க சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
கோவில் கோபுரத்தில் சிறப்பு கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் தகவல்களின்படி, சுவாமிமலையில் பிரத்தியேகமாக சிலைகள் செய்யப்பட்டன. குறைந்தபட்சம் 21 சிவாச்சாரியார்கள் கோவிலில் துதிப்பாடல்களுடன் யாகசாலை பூஜைகளை நடத்தினர்.
திருமங்கலம் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், "மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை நினைவாக அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி திறந்து வைத்த ஓரிரு நாட்களில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் ஜெயலலிதாவின் உருவச் சிலை திறக்கப்பட்டது", என்றனர்.
ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகளும் பூஜைகளும் நடைபெறுகிறது.