திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலி அருகேயுள்ள மூவராயன்பாளையம் கிராமத்தில், நல்லாயி அம்மன் கோவில் புதிதாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் சமீபத்தில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, 48-வது நாள் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வந்தன. கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, முக்கொம்பு காவிரி ஆற்றுக்கு புனித நீர் எடுக்கச் சென்றனர்.
அங்கு, குடங்களில் புனித நீரை நிரப்பிய பிறகு, கிராம மக்கள் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, சிலர் வான வேடிக்கை வெடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். எதிர்பாராத விதமாக, வானத்தை நோக்கி வீசப்பட்ட ஒரு வெடி, அருகிலிருந்த மரத்தின் மீது பட்டு, திசைமாறி கீழ்நோக்கி வந்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த வெடி பூவரசன் - மனோகரி தம்பதியின் இரண்டரை வயது மகள் ஹனிக்கா மீது விழுந்து வெடித்தது.
இந்த கோர விபத்தில் சிறுமி ஹனிக்கா பலத்த காயமடைந்து அலறினார். உடனடியாக, பதறிப்போன கிராம மக்கள் சிறுமியை அருகிலுள்ள சிறுகாம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி ஹனிக்கா பரிதாபமாக உயிரிழந்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/25/whatsapp-image-2025-2025-07-25-16-21-10.jpeg)
இந்தத் துயரச் சம்பவம் குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஹனிக்காவின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் கிராமத்திற்குள் வந்தபோது, ஒட்டுமொத்த கிராம மக்களும் சிறுமியின் உடலைப் பார்த்து கதறி அழுத காட்சி காண்போரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.