சிலைகள் திருட்டு போவதை உயர் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது, சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.
சிலைகள் திருட்டு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட்ராமன் ஆகியோர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.
சிலைகள் திருட்டு விவகாரம் தொடர்பான வழக்குகளை நீதிபதி மகாதேவன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஜ.ஜி பென்.மாணிக்கவேலை நியமித்தும், சிலைகளை பாதுகாப்பது தொடர்பான 23 வழிமுறைகளையும் அரசுக்கு பிறப்பித்தார்.
ஆனால் ஒரு வருடமாகியும், சிலையைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் அமைப்பது தொடர்பான உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என கடந்த வாரம் நீதிபதி குற்றம் சாட்டியதுடன், ஸ்ட்ராங் ரூம் அமைப்பது குறித்த அட்டவணையை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
சிலைகள் திருட்டு ... எச்சரிக்கை!
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜராகவும், அட்டவணையை தாக்கல் செய்வதற்கும் அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை வரை அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கை ஜூலை 13-ஆம் தேதிக்கு நீதிபதி மகாதேவன் தள்ளிவைத்தனர்.
அப்பொழுது மனுதாரரான ரங்கராஜன் நரசிம்மன் குறுக்கிட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே சிலை கடத்தல் தொடர்வதாகவும், ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் மாயமாகிறது, மரவேலைப்பாடுகள் சிதைக்கப்படுகிறது, பழங்கால பொருட்கள் திருடப்படுகின்றன என தெரிவித்தார். இதுதொடர்பாக ஆயிரத்துக்கும் அதிகமான மின்னஞ்சல் புகார் கொடுத்தும் இதுவரை காவல்துறை திருட்டை தடுப்பதற்கு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டினார்.
அப்போது, நீதிபதி குறுக்கிட்டு தனக்கும் புகார்கள் வருவதாகவும், அண்ணாமலையார் கோவிலில் பஞ்சலோக சிலை கூட திருடப்பட்டதாக செய்திகள் வந்ததாக குறிப்பிட்டார். சிலை கடத்தல் தொடர்வது அரசின் நிர்வாகத் திறமை குறைபாட்டையே காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
சைவமும், வைணவமும், மொழியும், கலாச்சாரமும் தழைத்தோங்கும் இந்த மண்ணில், இதுபோன்ற சிலைகள் திருட்டு தொடருமேயானால் அதை நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்றும், தமிழர்களின் புராதனம், கலாச்சாரம் உள்ளிட்டவைகளுக்கு ஒரு பாதிப்பு ஏற்படும் போது அதனை நீக்க முறையிட இடம் நீதிமன்றம் தான், அதிலும் இந்த பிரச்சினைகளை இந்த நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என தெரிவித்தார்.
சிலை திருட்டு நடவடிக்கைகளை தடுக்க முறையான தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட நேரிடும் என தமிழக அரசை எச்சரித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.